தேசியத் தலைவரின் சிந்தனைகளுக்கு முன்னால் தவிடுபொடியாகும் மஹிந்த சிந்தனை!

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் முதன்முதலாக ஜனாதிபதி பதவிக்கு வந்து சில வருடங்களின் பின்னர் அறிமுகம் செய்த மகிந்தவின் சிந்தனைகள் இன்னும் தூங்கிக்கொண்டே இருக்கின்றன.தனது சிந்தனைகன் தூக்கத்தை தழுவிக் கொண்டிருந்தாலும் அவர் மட்டும் இலங்கையில் தங்குவதிலும் பார்க்க அதிகமாக வெளிநாடுகளுக்கு பறப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளார் என்பதை நாம் செய்திகள் மூலமாக அறிகின்றோம்.சுமார் 7 வருடங்களுக்கு முன்பு, 2005ம் ஆண்டு, இலங்கைக்கான ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது மகிந்த ராஜபக்ச மேற்படி தேர்தலில் தான் எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்பதற்காக தமிழர்களின் வாக்குக்களை வென்றெடுக்கும் நோக்கோடு, தமக்கு சாதகமாக பலமான சக்தியொன்றை தேடிக்கொண்டிருந்தார்.

அவர் அந்த வேளையில் பலமான சக்தி ஒன்றை நாடிச் சென்ற நோக்கம் அப்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் ஒரு “வெறியாகவே விளங்கியது. ஆமாம் 2005 ம் ஆண்டு தமிழர் பக்கத்தில் பலமான ஒரு அரசியல் சக்தியாக விளங்கிய ஒரு அமைப்பின் ஆசிர்வாதத்தால் மகிந்த ராஜபக்ச சுமார் 48,90, 000 வாக்குகளைப் பெற்று வெற்றியை தழுவினார்.இரண்டாவது இடத்தைப் பெற்ற ரணில் விக்கிரமசிங்க சுமார் 47,00,000 வாக்குகளைப் பெற்றார். பெரும்பாலான தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறவில்லையே என்ற கவலையைப் பகிர்ந்து கொண்டிருந்த வேளையில்தான் மகிந்தவிற்கு மறைமுகமான ஆதரவை வழங்கிய மேற்படி பலமான சக்தியின் தலைவராக விளங்கியவர் தனது நண்பர்களுக்கு கூறினாராம்.

“ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வந்தால் நமக்கு ஒன்றுமே செய்யமாட்டார். அதேவேளையில் வெளி உலகத்தோடு முக்கியமாக மேற்குலக நாடுகளோடு நட்புறவை பேணியபடி தனது காய்களை நகர்த்திச் செல்வார்.ஆனால் மகிந்தவோ ஜனாதிபதியாக வந்தால் தன்னிடம் கேள்வி கேட்கும் மேற்குலக நாடுகளிடம் கேள்விகள் கேட்டு விவாதத்திற்குப் போவார். அவ்வாறு விவாதங்கள் நடக்கும்போது அந்தந்த நாடுகளின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்வார்.அவ்வாறு மகிந்த ராஜபக்ச வெளிநாடுகளோடு விரோத்தை சம்பாதிக்கின்ற போதுதான் அந்த நாடுகள் நமது ஈழத்தமிழர்களின் போராட்டத்தின் அர்த்தங்களைப் புரிந்து கொள்பவையாக இருக்கும். காலப்போக்கில் மகிந்த ராஜபக்ச உலகின் பெரும்பாலான நாடுகளோடு பகையை வளர்த்துக்கொண்ட ஒரு பேர்வழியாக மாறிவிடுவார்.இது எமது தமிழ் இனத்திற்கு சாதகமான ஒரு அரசியல் நிலை என்றே கூறுவேன். இவ்வாறு கூறுவாராம் அந்தத் தலைவர். நாம் இந்த கூற்றை ஆழமாக படிப்போமானால் இனிமேல் சில உண்மைகள் விளங்கும்.

தற்போதைய ஜனாதிபதி மகிந்தவுக்கு இயல்பாகவே உள்ள கோபம், பொறாமை போன்ற விரும்பத்தகாத குணாம்சங்களால் அவர்தம் செல்வாக்கு உலகின் பல பாகங்களிலும் வீழ்ச்சியடைகின்றதைப் பார்க்கின்றோம்.இவ்வாறு மகிந்த என்னும் ஒரு நபர் உலகின் பல நாடுகளினால் “விலக்கப்பட வேண்டிய நபர்” என்ற பார்வையில் பார்க்கப்படுவார். அல்லது பதவியிலிருந்து விலக்கப்படுவார் என்ற நம்பிக்கை மறுபக்கத்தின் தலைவருக்கு இருந்துள்ளது வியக்கத்தக்க ஒரு உண்மையாகும். ஜனாதிபதி மகிந்தவிற்கு எதிராக இந்த வாரத்தில் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அவரின் அரசியல் முடியும் காலத்திற்கு கட்டியம் கூறுவதாகவே அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

மேற்படி ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்தக்கள் மேற்படி ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் பதற்றத்தில் மூழ்கியுள்ளதை நன்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது

அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறுகையில்,

புலிகள் அமைப்பு இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அவரின் நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிப்பதும் உகந்த விடயங்களாக எங்களுக்குத் தெரியவில்லை. அந்த வகையில் இந்த நிலைமையை தடுத்திருக்க இங்கிலாந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அவ்வாறு முடியாமல் போனமை குறித்து கவலை அடைகின்றோம்” என்றும் அவதிப்படுவதை நாம் செய்திகள் மூலமாகப் பார்க்கின்றோம்.இவ்வாறான சம்பவங்களை நாம் உற்று நோக்குகையில், தமிழர் தரப்பின் பலமான சக்தியின் தலைவரின் தீர்க்கதரிசனமான சில சிந்தனைகள் மகிந்தவை ஒரு அழியும் நிலைக்கே தள்ளப்பார்க்கின்றன என்று நாம் துணிந்து கூறலாம்.

மகிந்தவின் சிந்தனைகள் வெறும் வெற்றுத் தாளில் எழுதப்பட்ட எழுத்துக்களாகவே உள்ளன. சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் தமிழர் தரப்பின் பலமான சக்தியின் தலைவர் மகிந்தவின் எதிர்காலம் இப்படித்தான் அமையும் என்று சிந்தனை செய்து பல விடயங்களை இரகசியமாக செய்தமை பாராட்டுக்குரியவையாகும்.தோல்வியின் நாயகனாக தற்போது மாறி வரும் மகிந்த பற்றி சிந்தனை செய்தவை தற்போது நிதர்சனமாக நடக்கும் சம்பவங்களாகவே உள்ளன என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இவ்வாறு நாம் பார்க்கும் போது நாம் மேற்குறிப்பிட்ட தமிழர் தரப்பின் பலமான சக்தியாக விளங்கிய பிரபாகரன் சிந்தனைகள், மகிந்தவின் சிந்தனைகளை தோற்கடிக்கும் ஒரு காலம் வரும்போது அது நமது தமிழினத்தின் விடிவிற்கான மணியோசை என்றே நாம் கருத வேண்டும்.

கனடா உதயன் கதிரோட்டம்

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb