வவுனியாவில் புலிகளுக்கு ஆதரவான, எதிரான வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள்! (படங்கள்)


இராணுவத்தினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு இம்மாதம் 18 ஆம் திகதியுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், அத்தினத்தன்று மறைந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு வவுனியா நகரின் பல்வேறு இடங்களிலும் புலிகள் இயக்கதினால் உரிமைகோரப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்போம்' தலைப்பிடப்பட்டுள்ள மேற்படி சுவரொட்டிகளில், '18.05.2012 அன்று அனைத்து தமிழீழ மக்களும் உணர்வுபூர்வமாக பொது இடங்கள், கோயில்கள், வீடுகள் போன்றவற்றில் எங்கள் உறவுகளுக்காகவும் மாவீரர்களுக்காகவும் அஞ்சலி செலுத்துவோம்' என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அத்துடன், 'எம் தலைவர் சாகவில்லை. நாங்கள் மீண்டும் பொங்கி எழுவோம். புலிகளின் தாகம்... தமிழீழ தாயகம்' என்று கையெழுத்தால் எழுதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் உரிமை கோரப்பட்ட நிலையில் இச்சுவரொட்டிகள் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.


இதேவேளை, மேற்படி சுவரொட்டிகளுக்கு எதிராக 'தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக முன்னிற்கும் இயக்கத்தினால்' உரிமை கோரப்பட்ட மேலும் சில சுவரொட்டிகளும் வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.


அன்பார்ந்த மக்களே' என்று தலைப்பிடப்பட்ட இந்த சுவரொட்டிகளில், 'புலிகளின் கெடுபிடியில் இருந்து மீண்டு சுதந்திரமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் இவ்வேலையில் ஒருசில தீய சக்திகளால் புலிகளையும் அவர்களின் நடவடிக்கைகளையும் மீண்டும் ஞாபகப்படுத்தி துண்டுப் பிரசுரங்களை வெளியிடுதல், போஸ்டர் ஒட்டுதல் போன்ற நடவடிக்கைகள் செய்து மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.


எனவே இத்தீய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு துணைபோகாது, எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு எம் அனைவரினதும் கடமையாகும்' என்று அந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb