இரத்தப் பரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோயை இனங்காணலாம்!


மார்பக புற்றுநோயை அது உருவாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எளிய இரத்த பரிசோதனை மூலம் கண்டறியமுடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இத்தகைய பரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரக்கூடும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கமுடியும் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.


கேன்சர் ரிசர்ச் என்கிற மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் பிளானகன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் 1380 பெண்களின் இரத்த மாதிரியை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டனர். இவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். காலப்போக்கில் இவர்களில் 640 பேருக்கு மார்பக புற்றுநோய் உருவானது.


இந்த 640 பேரின் இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களில் இருக்கும் ஏடிஎம் எனப்படும் குறிப்பிட்ட மரபணுவில் ஏற்படும் மாறுதல் இந்த பெண்களின் மார்பக புற்றுநோயை தூண்டியதாக இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இதன் அடுத்த கட்டமாக, இந்த குறிப்பிட்ட மரபணு ஏன் மாற்றமடைகிறது என்பதை இவர்கள் ஆராய்ந்தபோது, இந்த மரபணுவின் மேற்புறத்தில் இருக்கும் மிதைலேடன் எனப்படும் குறிப்பிட்ட ரசாயனப்பொருளில் ஏற்படும் மாற்றமே, மரபணுவின் மாற்றத்தை தூண்டுவதை இவர்கள் கண்டுபிடித்தனர்.


எனவே, ஒரு பெண்ணின் இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களில் இந்த குறிப்பிட்ட மிதைலேடன் என்கிற ரசாயனம் அதிகரித்து காணப்பட்டால் அந்த பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் உருவாவதற்கான சாத்தியம் இரண்டுமடங்கு அதிகம் இருப்பதாக இவர்கள் கணித்திருக்கிறார்கள். இவர்களின் இந்த கணிப்பை, மார்பக புற்றுநோய் உருவான 640 பெண்களின் இரத்த மாதிரிகளில் காணப்பட்ட அதிகரித்த மிதைலேடன் உறுதி செய்ததாக இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மருத்துவர் ஜேம்ஸ் பிளானகன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.


இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், இனிமேல் பெண்கள் எளிய இரத்த பரிசோதனை மூலம் தங்களுக்கு மார்பக புற்றுநோய் வரக்கூடுமா என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய முடியும் என்பது மருத்துவ உலகின் நம்பிக்கையாக இருக்கிறது. அப்படி கண்டுபிடிப்பதன் மூலம் அந்த பெண்கள் மார்பக புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுத்து அந்த நோயை ஒன்று தடுக்கலாம் அல்லது மார்பக புற்றுநோய் உருவாவதை மேலும் தள்ளிப்போடலாம் என்று இவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.


இந்த ஆய்வின் முடிவுகள், மார்பக புற்றுநோய் தடுப்பில் மட்டுமல்ல மரபணு மூலக்கூறுகள் எப்படி செயற்படுகின்றன என்கிற துறையிலும் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியிருப்பதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதாவது மரபணுக்காரணிகள் எப்படி மாற்றமடைகின்றன என்பதற்கான புதிய புரிதலையும் இந்த ஆய்வு வழங்கியிருப்பதாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb