பொட்டம்மானை நேரில் கண்டேன் - பிரபாகரனின் பாதுகாப்புப் பிரிவு போராளி தெரிவிப்பு!


தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு, நீண்ட நாட்களாகப் பாதுகாப்பு வழங்கிவரும் படையணியாக இம்ரான் பாண்டியன் படையணி இருந்தது யாவரும் அறிந்த ஒரு விடையம். இது இராணுவத்துக்கும் தெரிந்த தகவல் தான். தலைவரின் பாதுகாப்பை இப்படையணியூடாகப் பாதுகாத்து வந்தவர்களுள் மிக முக்கிய நபராக சொர்ணம் கருதப்படுகிறார். ஆனால் பலர் அறிந்திருக்காத விடையம் ஒன்று உள்ளது, ஏன் ..விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலர் கூட இதனை அறிந்திருக்கவில்லை எனலாம். அது என்னவென்றால் 2002ம் ஆண்டு இம்ரான் பாண்டியன் படையணி பிரிக்கப்பட்டு, அதில் உள்ள சிலரைக் கொண்டு ராதா வான்காப்பு படையணி பலப்படுத்தப்பட்டது. பின்னர் அப்படையணியே தலைவரின் பாதுகாப்பை கவனித்துவந்தது.


இவர்களுக்கே சைவர் (0 0) இலக்கத்தில் ஆரம்பிக்கும் தகடுகள் வழங்கப்பட்டது. (விடுதலைப் புலிகள் தங்கள் கழுத்தில் நச்சுக் குப்பியோடு சேர்த்து இத் தகடுகளை அணிந்திருப்பது வழக்கம்) இவ்வாறு சைவர் தகடுகள் வழங்கப்பட்ட போராளிகளே முள்ளிவாய்க்கால்வரை தேசிய தலைமையை பாதுகாத்து வந்துள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை தான் கண்டு அவரோடு பேசியதாக, சைவர் இலக்க தகட்டுடன் போராடி பின்னர் மீண்டு வந்துள்ள போராளி ஒருவர் அதிர்வுக்குத் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இருந்து, நந்திக்கடல் பக்கமாகச் செல்ல ஒரு பாதை இருப்பதாகவும், அப்பாதையில் உண்டியல் பிள்ளையார் கோயில் என்று ஒரு கோவில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கறுப்பு நிறம் கொண்ட, சேறு சகதிகளில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிளில் வந்த பொட்டு அம்மான், கடல் மூடப்பட்டுவிட்டதா என்று தன்னிடம் கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதனூடாக, ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர், பொட்டம்மானை தாம் காணவில்லை என்றும், முள்ளிவாய்க்கால் பகுதியில் பொட்டம்மான் இருக்கவில்லை என்ற கூற்றுக்களில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது. ராதா வான்காப்பு படைப்பிரிவில் இருந்து சிலர் மற்றும் தலைவரின் மகனின் பாதுகாப்பு பிரிவில் இருந்து சிலரும் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று, இராணுவ முற்றுகையை உடைத்து வெளியேற முற்பட்டுள்ளனர். இந் நிலையில் அவர்களை இராணுவம் சுற்றிவளைத்துவிட்டது. (இதில் தலைவரின் மகன் சாள்ஸும் அடங்குவார்) இக் குழுவில் இருந்த எழில் வண்ணன் என்பவர், தனது சட்டலைட் தொலைபேசியூடாக டென்மார்க்கில் உள்ள உற்ற நண்பரைத் தொடர்புகொண்டு, தாம் சுற்றிவளைக்கப்பட்டதை விபரித்துள்ளார். அச் சுற்றிவளைப்பில் இருந்து தாம் தப்பிக்க முடியாது எனவும், எல்லாம் முடிந்துவிட்டது... ஆனால் போராட்டத்தை புலம்பெயர் மக்களே இனிக் கொண்டு நடத்தவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இருந்து, தன்னுடன் பேசிவிட்டு புறப்பட்ட பொட்டம்மானைப் பார்த்து என்ன செய்யப்போகிறீர்கள் என நான் கேட்டேன். போராடுவோம் இறுதிவரை போராடுவோம். கடல் மூடப்பட்டால், பிறிதொரு பகுதியை உடைக்க முடியும் என்று சற்றும் மனம் தளராதவராய் அவர் கூறிவிட்டு, நந்திக்கடல் பக்கமாகச் சென்றார் என்று சைவர் இலக்க தகடு கொண்ட போராளி ஒருவர் மேலும் தெரிவித்தார். தேசிய தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சுமார் 600க்கும் மேற்பட்ட போராளிகள் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவரும் இலக்கை அடைந்தார்களா என்பது தான் தனக்குத் தெரியவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் பொட்டம்மான் குறித்து முன்னர் வெளியான பல தகவல்கள் பிழையானவை என்பது மட்டும் தற்போது நிரூபனம் ஆகியுள்ளது எனலாம். அவர் தேசிய தலைவரோடு முள்ளிவாய்க்காலில் நின்றிருந்தது உறிதிப்படுத்தப்பட்டுள்ளது.


நன்றி அதிர்வு.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb